மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 7 September 2021

இதயத்திற்கு இதமான 'ஐந்து' உடற்பயிற்சிகள்..


இதயத்திற்கு இதமான 'ஐந்து' உடற்பயிற்சிகள்..

       உடற் பயிற்சி என்பது உடல் நிலையையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற்பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது.

      உலக அளவில் தினமும் ஏராளமானோர் இதய நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடியே 71 லட்சம் பேர் இதய நோய் பிரச்சனைகளுக்குள்ளாகி இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வயதானவர்கள் மட்டுமல்ல இளைஞர்களும் இதய நோய் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். ஒருசில உடற்பயிற்சிகளும் இதய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க உதவும்.


ஏரோபிக்ஸ் (சீருடல் பயிற்சி) :

      இந்த உடற்பயிற்சி இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். மேலும் உடல் வலிமையையும் அதிகரிக்க செய்யும்.


        ஏரோபிக்ஸ் பயிற்சிகளில் நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிள் மிதித்தல், நீச்சல், ஜம்பிங் போன்றவை அடங்கும். இவற்றுள் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடங்கள் செய்து வருவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.


தசைகளை வலுவாக்கும் பயிற்சி :

        'ரெசிஸ்டன்ஸ் டிரெயினிங்" எனப்படும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை செய்வது உடல் அமைப்பை மேம்படுத்த உதவும். உடலில் அதிக கொழுப்பு தசை கொண்டவர்கள், தொப்பை உடல்வாகு உடையவர்கள் இந்த பயிற்சிகளை செய்யலாம்.


         ஏனெனில் இத்தகைய உடல்வாகுதான் இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. புஷ்அப்ஸ், சின் அப்ஸ், குனிந்து நிமிர்ந்து செய்யும் பயிற்சிகள், டம்பெல்ஸ், பார்வெல்ஸ் போன்ற கைகளால் செய்யும் பயிற்சிகளை செய்து வருவதும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.


உடலை வளைக்கும் பயிற்சிகள் :

           தரையில் அமர்ந்திருந்தபடி கைகளை கொண்டு கால்களை தொடுவது, உடலை வில்லாக வளைத்து கையை கொண்டு காலை தொடுவது, உடலை பின்னோக்கி வில்லாக வளைப்பது போன்ற பயிற்சிகள் உடலை நெகிழ்வடைய செய்து தசை ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும்.

          இத்தகைய நெகிழ்வான பயிற்சி மூட்டுவலி, தசைப்பிடிப்பு, தசை சார்ந்த பிற பிரச்சனைகளை போக்க உதவும். 


யோகா :
         தியானம் மற்றும் யோகா செய்வதும் தசைகளை வலுப்படுத்த உதவும். இதய ஆரோக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தினமும் இவைகளை மேற்கொள்வது இதயத்தின் நலனுக்கு ஏற்றது.


இடைவெளியுடன் பயிற்சியை தொடர்வது :

         ஒரு நிமிடம் ஓடுவது, பின்னர் மூன்று நிமிடம் நடப்பது பின்னர் மீண்டும் ஓடிவிட்டு நடப்பது என குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் சுழற்சி அடிப்படையில் இருவேறு பயிற்சிகளை செய்வதும் நல்லது. இப்படி இடைவெளியுடன் வேறு பயிற்சிக்கு மாறுவது உடல் சோர்வடையாமல் நீண்ட நேரம் பயிற்சி செய்வதற்கும் உதவும்.

        இதய நோய்களை தடுப்பதில் இந்த பயிற்சிகள் முக்கிய பங்கு வகிப்பவை என்பதால் இவற்றுள் ஏதாவது ஒன்றை தினமும் செய்து வருவது நல்லது. ஏனெனில் உடல் இயக்க செயல்பாடு இல்லாமல் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியாது.

Pages