மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 11 October 2024

அஸ்திர பூஜை பற்றி தெரியுமா?


        நவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்று. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறோம். இறுதிநாளில் சரஸ்வதியை வழிபாடு செய்வதால், அந்த நாளை ‘சரஸ்வதி பூஜை’ என்ற பெயரில் கொண்டாடுகிறோம்.


     கல்விக்கு அதிபதியாக விளங்குபவர், சரஸ்வதி. அவரை தினமும் வழிபாடு செய்தாலும், அவருக்கான சிறப்பு நாளாக சரஸ்வதி பூஜை இருக்கிறது. இந்த நாளில் கலைகளில் தேர்ச்சி பெறவும், ஞானம் வேண்டியும், நினைவாற்றல் வலுப்பெறவும், படிப்பில் நல்ல நிலையை எட்டவும் அனைத்துத் தரப்பினரும் வழிபாடு செய்வார்கள்.


     ஒரு மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே போல அவர் செய்யும் தொழிலும் முக்கியத்துவம் பெற்றது. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பது பழமொழி. எனவே நாம் செய்யும் தொழிலையும், அதற்கான கருவிகளையும் இறைவனின் முன்பாக வைத்து வழிபடும் முறையும், இந்த நாளில் பின்பற்றப்படுகிறது. எனவே இந்த தினம் ‘ஆயுத பூஜை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

    மகாபாரத காவியத்தில், ஆயுத பூஜையின் முக்கியத்துவம் சொல்லப்பட்டு இருக்கிறது. கவுரவர்களுடனான சூதாட்டத்தில் தோல்வியைத் தழுவிய பாண்டவர்கள், தங்களுடைய நாடு, உடமைகளை இழந்து வனவாசம் செல்ல நேர்ந்தது. கடைசி ஒரு வருடம் ‘அஞ்ஞாத வாசம்’ மேற்கொள்ள வேண்டும். அதாவது யாரும் அறிந்து கொள்ளாதபடி, எவர் கண்ணிலும் படாமல் வாழ வேண்டும். இல்லையென்றால் மீண்டும் வனவாசத்தை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும். 

    எனவே பாண்டவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களை ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டு, மாறுபட்ட தோற்றத்தில் வேறு வேறு இடத்தில் தங்கியிருக்க நினைத்தனர். அதன்படி அவர்கள் அனைவரும் ஒரு வன்னி மரத்தின் அடியில் தங்களுடைய ஆயுதங்களை பதுக்கிவைத்துவிட்டு, ஆளுக்கொரு திசையில் சென்றனர்.


       ஓராண்டு அஞ்ஞாத வாசம் முடிந்த பிறகு, மீண்டும் அவர்கள் வன்னி மரத்தின் கீழ் வந்து கூடினர். அவர்களின் ஆயுதங்கள் அங்கேயே பாதுகாப்பாக இருந்தது. பாண்டவர்கள் அனைவரும் ஒன்பது நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஆயுதங்களுக்கு பூஜை செய்து, அதன்பிறகு அதை எடுத்து பயன்படுத்தத் தொடங்கினர். அன்றைய தினமே ‘ஆயுதபூஜை’ என்றும், ‘அஸ்திர பூஜை’ என்றும் அழைக்கப்படுகிறது.


அனைவருக்கும் இனிய ஆயூதபூஜை நல்வாழ்த்துகள்... ! அனைவரின் வாழ்விலும் கல்வியும், செல்வமும் பெருக நல்வாழ்த்துகள்....

Pages