இந்தியா சுதந்திரம் அடைய வேண்டுமென்பதை வலியுறுத்தி விட்டு வெளிநாட்டிலிருந்து டெல்லிக்குத் திரும்பிய மகாத்மா டெல்லி ரயில் நிலையத்திற்குச் சென்று ரயிலில் ஏறினார். அப்போது அவரது கால்களில் மாட்டி இருந்த செருப்புகளில் ஒன்று கீழே தரையில் விழுந்து விட்டது. உடனே ரயில் கிளம்பி விட்டது. மகாத்மா உடனே தனது அடுத்த காலிலிருந்த செருப்பையும் கழட்டிக் கீழே ஏறிந்தார் அருகில் இருந்தவர் மகாத்மாவிடம், “பாபாஜி, ஏன் அடுத்ததையும் கழட்டிக் கீழே எறிந்தீர்கள்” என்று கேட்டார்.
அதற்கு அவர், “கீழே கிடக்கும் ஒரு செருப்பைக் கண்டெடுப்பவர் அதனால் பயன் அடைய முடியாது அல்லவா? அதற்காகத் தான் இன்னொரு செருப்பையும் அதன் அருகில் எறிந்தேன்” என்று பதில் கூறினார்..
பன்னிரெண்டு மாதங்கள் கழிந்தன. லக்ஷ்மி தேவியின் திருவிழாவில் கலந்து கொள்ள ஒரு நகருக்கு காந்திஜி விஜயம் செய்தார்.கூட்ட நெரிசலில் காந்திஜியுடன் சென்ற தொண்டர்கள் அவரை விட்டுச் சற்று விலகி விட்டனர். அப்போது அவருக்குப் பின்னாலிருந்து கடூரமான குரல் ஒன்று ஒலித்தது. “நீங்கள் பாரதத்தை நாசம் செய்கிறீர்கள்.”
யார் இப்படிப் பேசுகிறார் என்று காந்திஜி திரும்பிப் பார்ப்பதற்குள் அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. பின்னால் இருந்து குற்றம் சாட்டியவர் மகாத்மாவைக் கீழே தள்ளி விட்டார். கீழே விழுந்த காந்திஜி ஒரு புறமாகத் தள்ளப்பட்டார். அப்போது.” அவரை ஒன்றும் செய்யாதே”, என்ற கம்பீரமான குரல் ஒன்று கேட்டது.பின்னால் கசமுச என்று சப்தம் கேட்டதை காந்திஜி உணர்ந்தார். தன்னைத் தள்ளியவரை ஒருவர் அப்புறப்படுத்தியதை உணர்ந்து கொண்டார். அப்புறப்படுத்தியவரின் கால்களைத் தரையில் படுத்திருந்த காந்திஜி பார்க்க நேர்ந்தது.
ஆஹா! அதே ஜோடி செருப்புகள்!! அவருக்குத் தெரிந்து விட்டது. தான் ரயிலில் முன்பொரு சமயம் தூக்கி எறிந்த செருப்பும் தவறி விழுந்த செருப்பும் தன்னைக் காப்பாற்ற முயன்றவரின் காலில் மாட்டப்பட்டிருப்பதை காந்திஜி பார்த்தார். அவரது செருப்புகளை அவருக்கு நன்கு அடையாளம் தெரியும். ஏனெனில் அவை விசேஷமான அளவுகள் உடையவை.
காந்திஜியை மெதுவாக தூக்கி நிறுத்திய அவர், “பாபுஜி! ஒன்றும் தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்! அந்த முரடன் ஒரு முட்டாள்! நானும் கூட அவனைப் போலத் தான் சென்ற வருடம் வரை இருந்தேன்” என்றார்
காந்திஜி வியப்பு மேலிட,” சென்ற வருடம் வரை என்றால்..? உங்களை மாற்றியது எது?” என்று தன் மேலிருந்த தூசியைத் தட்டி விட்டவாறே கேட்டார்.
காந்திஜியைக் காப்பாற்றியவர் தன் கதையைச் சொன்னார்
சென்ற வருடம் வரை எனக்கு வேலையே கிடைக்காமல் இருந்தது. தாங்க முடியாத கஷ்டத்தில் இருந்தேன்.என்னுடைய நண்பன் ஒருவன் அருகிலிருந்த லக்ஷ்மி கோவிலுக்கு என்னை அழைத்தான். செல்வச் செழிப்பை அருளும் லக்ஷ்மியின் கோவிலுக்கு வந்தால் நல்ல வழி பிறக்கும் என்றான். ஆனால் எனக்கோ மனமே இல்லை.
என் நண்பனிடம், “அந்தக் கோவில் மிகவும் தூரத்தில் இருக்கிறது. எனக்கோ காலில் செருப்பு கூட இல்லை? எப்படி வருவதாம்?” என்றேன். அப்போது ரெயில் தண்டவாளப் பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்தோம். அங்கே அழகிய ஒரு ஜோடி செருப்பைக் கண்டேன். அதை எடுத்து அணிந்து கொண்டேன். அது என் காலுக்குச் சரியாகப் பொருந்தியது.
“இப்போது வரலாமில்லையா” என்றான் நண்பன். அவனுடன் கோவிலுக்குச் சென்றேன்.
என்ன ஆச்சரியம்! அந்த புதிய செருப்புகளை அணிந்ததிலிலிருந்து எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. கோவிலில் சேவை செய்து அனைவருக்கும் உதவலானேன். அங்கிருந்த கோவில் முக்கியஸ்தர்களுள் ஒருவர் என் சேவையைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து எனக்கு பக்கத்திலிருந்த டவுனில் ஒரு வேலை போட்டுக் கொடுத்தார். நான் இப்போது அனைவராலும் மதிக்கப்படுகிறேன்.”
கருணை ததும்பும் விழிகளுடன் அவரைப் பார்த்த மஹாத்மா, “நல்லது. உங்களுக்கு நன்றி” என்று மெதுவாகக் கூறியவாறே நகர்ந்தார்.
இந்தச் சம்பவத்தை தன் ‘கர்மா மானுவல்’ என்ற நூலில் விளக்கும் டாக்டர். ஜான் மம்போர்ட், “நல்ல விளைவுகளை விளைவிக்கும் ஆகாமி கர்மா (உள்ளுறையும் கர்மம்) விதைக்கப்பட்டது. அதுவே வெகு சீக்கிரமே பிராரப்த கர்மாவாக மாறி பலனை அளித்தது” என்று விளக்குகிறார்.