மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 30 November 2021

கோபம் சிறுகதை

      அது காட்டை ஒட்டிய ஒரு கிராமம். இளைஞன் ஒருவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். அழகிய புள்ளிமான் அவனிடம் சிக்கிக் கொண்டது. மிரள மிரள விழித்து நின்ற அக்குட்டியை, அம்பு, வேலைப் பயன்படுத்தாமல், கைகளிலேயே தூக்கிவிட முடிந்தது.


      அந்த மான் குட்டியின் அழகிலும், மருட்சியிலும் மயங்கிய அவன் அதனை வளர்க்க முடிவு செய்தான். வீட்டில் வளர்த்து வந்த அந்த மான் வளர்ப்புப் பிராணியாக செல்லமாக இருந்து வந்தது.


      திடீரென ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. அது விலகி ஓட வாய்ப்பில்லை. காணாமல் போய்விட்டது அல்லது களவு போய்விட்டது.


      இளைஞனுக்கோ ஆத்திரம். இந்த மானைக் களவாடியவர்களை எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உக்கிரமாக உருவெடுத்தது.


      உடனே ‘கடவுளே எனக்கு தரிசனம் தா! என்று கடவுளைத் துதித்தான். கடவுளும் வந்தார்..!


“பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன?” என்று கடவுள் கேட்டார்.


      அறிவாளி பக்தனாக இருந்தால், “நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்துச் சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு மீண்டும் கிடைக்க வேண்டும்” என்று கேட்டிருப்பான். ஆனால், அவன் கண்களைத்தான் கோபம் மறைத்து நிற்கிறதே!


      “கடவுளே! நான் ஆசையாக வளர்த்த மானைக் காணவில்லை. அந்த மானைத் திருடியவன் யாராக இருப்பினும், அவனை என் முன்னே காட்டவேண்டும். அவனை என் ஆத்திரம் தீர அடித்துத் துவைக்க வேண்டும்” என்றான்.


      வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தருபவராக இருந்தாலும் கடவுள் பக்தனின் இந்தக் கோரிக்கைக்குத் தயங்கினார்.


        “பக்தா.. உன் மானை திருப்பித் தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே. உனக்கு நல்லதல்ல!” என்றார்.


        “இல்லை. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் கள்ளனைப் பழிவாங்காமல் விடமாட்டேன். நீங்கள் வரம் தாருங்கள், வருவதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வரத்தில் வறட்டுப் பிடிவாதம் காட்டினான் இளைஞன்.


         “சரி நீ கேட்கும் வரத்தைத் தருகிறேன். உன் மானைத் திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்துக் கொள்…” வரத்தைத் தந்த கடவுள் மறைந்து விட்டார்.


         பக்தன் ஆவேசமாகத் திரும்பினான். அங்கே உறுமலுடன் நின்று கொண்டிருந்தது ஒரு முரட்டு சிங்கம். அதன் கண்களில் பசி தெரிந்தது.


          பழிவாங்கும் கோபம் நொடியில் மறைய, இளைஞனுக்கு பயம் பிடித்துக் கொண்டது. கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓடத் தொடங்கிய அவன், அலறினான். “கடவுளே, என்னைக் காப்பாத்து!”


அதுதான் அவனது கடைசி வார்த்தைகள்.


கடவுள் சிரித்தார்.

நீதி - ஆத்திரம், கோபம் அறிவின் கண்ணை அடைத்து அழிவை நோக்கி அழைத்து சென்று விடும்.

Pages