மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 19 December 2021

மழையில் இத்தனை வகைகள் உள்ளனவா?



          மழை என்பது மனிதனுக்குக் கிடைத்த இயற்கையின் வரம். மழைத் துளிகளின் வடிவம் மற்றும் அளவின் செயல்பாடாக மழை வகைப்படுத்தப்படுகிறது. தமிழில் 14 வகையான மழை உண்டு. அவை மழை, மாரி, தூறல், சாரல், ஆவி, சோனை, பெயல், புயல், அடை(மழை), கன(மழை), ஆலங்கட்டி, ஆழிமழை, துளி மழை, வருள் மழை ஆகும்.


அடை மழை :
     இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை அடை மழை ஆகும். அடை மழை என்பது வினைத்தொகை. அடைத்த மழை, அடைக்கின்ற மழை, அடைக்கும் மழை என்று கூறுகிறோம். விடாமல் பெய்வதால் ஊரையே 'அடை"த்து விடும் மழை. அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடை மழை எனப் பெயர் பெற்றது. கன மழை வேறு, அடை மழை வேறு. அடை மழையில் நீர் பெரும் ஓடைகளையும், குளம், ஏரிகளையும் நிரப்பும் வகையில் இருக்கும்.


மாரி :
        இள மென்மையாக அலைந்து காற்றாடி போலப் பெய்வது 'மழை" ஆகும். தாய்ப்பால் போல சீராகப் பெய்வது 'மாரி" ஆகும். அதனால் தான் மாரியம்மன் என தெய்வத்தை தமிழ் மக்கள் அழைக்கவும் செய்தார்கள்.

        காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளச் சேதங்கள் இன்றி மக்கள் இன்னல்கள் அடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராகப் பெய்வது 'மாரி" ஆகும்.


ஆவி :
      ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி 'ஆவி" எனப்படுகிறது. இந்த வகை மழையில் உடலோ, உடையோ உடனே நனையாது.


தூறல் :
        காற்று இல்லாமல் தூவலாகப் பெய்யும் மழை 'தூறல்" ஆகும். புல், பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும். ஆனால் விரைவில் காய்ந்து விடும்.


சாரல் :
        பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்து வரப்படும் மழை 'சாரல்" எனப்படும். மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளைக் கொண்டு சென்று வேறிடத்திலும் வீசுவதை 'சாரல்" என்பர்.

       சாரல் மழை என்பது சாய்வாய் காற்றின் போக்குக்கும், வேகத்துக்கும் ஏற்ப பெய்யும் மழை என்பதே பொருள். சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும். மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்.


கன மழை :
       இந்த வகை மழையில் துளிகள் பெரிதாக, எடை அதிகம் கொண்டதாக இருக்கும்.


ஆலங்கட்டி மழை :
           திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து, மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே 'ஆலங்கட்டி மழை" ஆகும்.


பனி மழை :
        பனித் துகள்களே மழை போலப் பொழிவது 'பனி மழை" ஆகும். இது பொதுவாக இமயமலை, ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்.


ஆழி மழை :
        ஆழி என்றால் கடல். இது கடலில் பொழியும் மழையைக் குறிக்கும். இதனால் மண்ணுக்குப் பயனில்லை. ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம்மழை ஆகும்.

Pages