முன்னொரு காலத்தில் பொதிகை மலையை மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவன் புகழ் எங்கும் பரவியது. மற்றொரு நாட்டின் மன்னனான குணசீலன் என்ற மன்னன் மாறனைப் பற்றி கேள்விப்பட்டான். சிறிய பகுதியை ஆளும் மாறனுக்கு இவ்வளவு நற்பெயரா? நான் அவனைவிட வாரி வழங்கி பேரும் புகழும் பெற வேண்டும் என்று நினைத்தான். அதனால் தன்னுடைய பிறந்த நாளன்று மக்களுக்கு பரிசுகளை வாரி வழங்கப் போவதாக அறிவித்தான். மன்னனின் பிறந்த நாள் வந்தது. பரிசு பெறுவதற்காக நிறைய பேர் அரண்மனை முன்பாக கூடினர். அங்கிருந்த மேடையில் நின்றபடி ஒவ்வொருவருக்கும் பரிசு வழங்கிக் கொண்டிருந்தான் மன்னன்.
அப்போது தெற்கு வாயில் வழியாக மூதாட்டி ஒருவர் வந்தார். அவன் முன் கை நீட்டினாள். அவனும் பரிசு தந்து அனுப்பினான். சிறிது நேரம் சென்றது. மேற்கு வாயில் வழியாகவும் அதே மூதாட்டி வந்தாள். அவன் முன் கையை நீட்டினாள். மீண்டும் பரிசு பெற அவர் வந்திருக்கிறார் என்பதை அவன் தெரிந்து கொண்டான். அவருக்குப் பரிசு தந்து அனுப்பினான். மூன்றாம் முறையாக அந்த மூதாட்டி வடக்கு வாயில் வழியாக வந்தாள். கையை நீட்டினாள். இந்த மூதாட்டி திரும்பவும் வந்திருக்கிறாளே என்று முகத்தைச் சுளித்துக் கொண்டான். பரிசு கொடுக்க விரும்பமில்லாமல் வெறுப்புடன் அந்த மூதாட்டிக்கு பரிசு தந்து அனுப்பினான்.
திரும்பத் திரும்பத் தான் வருவதை அரசர் தெரிந்து கொண்டார். அதனால்தான் வெறுப்பைக் காட்டுகிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. இருந்தும் அவள் நான்காம் முறையாகக் கிழக்கு வீதி வழியாக வந்தாள். அரசனின் முன் கையை நீட்டினாள். அவளைப் பார்த்ததும் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. மூதாட்டியே! நீ எத்தனை முறைதான் பரிசு பெற்றுச் செல்வாய்? என்னை ஏமாளி என்று நினைத்துக் கொண்டாயா? உனக்குப் பரிசு ஏதும் தர மாட்டேன் என்று அவளை விரட்டினான்.
அங்கிருந்து செல்லாத அவள், அரசே! உங்களைப் போலவே பொதிகை மலை அரசர் மாறனும் பிறந்தநாள் பரிசு வழங்கினார். அவரிடம் நான் திரும்பத் திரும்பப் பதினாறு முறை சென்று கையை நீட்டினேன். என்னைத் தெரிந்ததாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் சிரித்த முகத்துடன் பரிசு தந்து அனுப்பினார். ஆனால், நீங்களோ நான் மூன்றாவது முறை வந்தபோதே கோபத்தைக் காட்டினீர்கள். நான்காவது முறை இல்லை என்றே விரட்டுகிறீர்கள் என்றாள். இதைக் கேட்ட அவன் தன்னால் மாறனைப் போல வள்ளலாக முடியாது என்பதை அறிந்து கொண்டான்.
நீதி :
தானம் செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்.