வேலை கொடு
ஒருவன் தவம் செய்து இறைவனிடம் தன் ஆசைகளையெல்லாம் நிறைவேற்ற ஓர் ஆள் வேண்டும் என்று கேட்டான். அதற்கு இறைவன், நீ கேட்ட வரத்தைத் தருகிறேன். ஆனால், நீ அவனுக்குத் தொடர்ந்து ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவன் உன்னை விழுங்கி விடுவான்.. என்றார்.
அவனும் சரியென்று சம்மதித்தான். உடனே இறைவன் அவனுடன் ஒரு பூதத்தை அனுப்பி வைத்தார். பேராசை கொண்ட அவன், அந்தப் பூதத்திடம், எனக்கு இந்த நாட்டு அரசன் வசிப்பதை விடப் பெரிய அரண்மனை ஒன்று வேண்டும் என்றான். கண் மூடிக் கண் திறப்பதற்குள் அழகிய அரண்மனை ஒன்றைக் கட்டிக் கொடுத்தது பூதம். அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
மேலும் மேலும் அவன் ஆசைப்பட்டவற்றையெல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றிவிட்டு, வேலை கொடு... வேலை கொடு... இல்லையென்றால் உன்னை விழுங்கி விடுவேன் என்று பூதம் அவனை மிரட்ட ஆரம்பித்தது. பூதத்துக்கு வேலை கொடுப்பதே அவனுக்கு வேலையாகிப் போய் விட்டது. அவனால் முடியாமல் போய் மிகவும் சோர்வடைந்து போனான்.
பூதம் அவனை விரட்ட ஆரம்பித்தது. மீண்டும் அவன் இறைவனிடம் ஓடினான். என்னைக் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கதறினான். மனமிறங்கிய இறைவன், அவனை விரட்டி வந்த பூதத்திடம், நான் சொல்லும் வரை இந்தப் படிகளில் ஏறி ஏறி இறங்கிக் கொண்டு இரு என்று கட்டளையிட்டார்.
பூதமும் இறைவன் சொன்னபடி, படிகளில் விடாமல் ஏறி, இறங்கிக் கொண்டேயிருந்தது. பேராசைக்காரன் நிம்மதிப் பெருமூச்சு விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணியபடி, இறைவனை வணங்கிவிட்டுச் சென்றான். அந்தப் பூதம் போலத்தான் நமது மனமும்.. நமது மனம் நமக்குத் தேவையானவற்றை அடைய வழியைக் காட்டும். பேராசைப்பட்டால் நம்மையே அழித்து விடும்.
நீதி :
பேராசை அழிவை தரும்.