மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 2 February 2022

பால் பாக்கெட்டுகளில் வெவ்வேறு நிறம் இருக்கக் காரணம் என்ன?


       பாக்கெட் பால் கொழுப்புச்சத்தை பொறுத்து ஒவ்வொரு கலரிலும் விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் தேவையான கொழுப்புச்சத்தை பொறுத்து உரிய நிற பால் பாக்கெட் வாங்கி பயன்படுத்தலாம். இதை அதிகம் சூடுபடுத்தவோ காய்ச்சவோ தேவையில்லை. ஏற்கனவே பாலை குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி விடுவதால் அதில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டுவிடுகிறது. அதே நேரம் அதிக அளவு பால் வாங்கி ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தாமல் அதில் குறிப்பிட்டிருக்கும் தேதிக்குள் பயன்படுத்திவிட வேண்டும். இல்லையெனில் இதிலிருக்கும் புரதச்சத்து அழிந்துவிடும். இப்போது எந்த நிறத்தில் இருக்கும் பாலை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.



பால் பதப்படுத்தும் முறை

         பால் கொள்முதல் செய்யும் இடங்களில் முதலில் லாக்டோ மீட்டர் என்னும் கருவியை கொண்டு அதில் இருக்கும் தண்ணீரின் அளவை பரிசோதனை செய்கிறார்கள். பாலில் குறைந்திருக்கும் சத்துக்கள் அளவையும் கண்டறியப்படுகிறது. அதன் பிறகு பால் குளிரூட்டப்பட்டு பிறகு 16 வகையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. பிறகு பாலில் இருக்கும் கசடுகள் வெளியேற்றப்படுகிறது. பால் 4 டிகிரி செண்டிகிரேடு வெப்பநிலைக்கு மாறி பெரிய கொள்கலனில் சேர்க்கப்படுகிறது.


         அதன் பிறகு படிப்படியாக பிளேட் ஹீட் எக்சேஞ்ச் எந்திரத்தின் முலம் 76 டிகிரி வரை 15 நொடிகள் சூடேற்றப்பட்டு 5 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் குளிர்விக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. பதப்படுத்தல் முறையையும் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டு கிருமிகள் வடிகட்டி நீக்கப்படுகிறது.


        பாலை பதப்படுத்திய பிறகு அதிலிருக்கும் கொழுப்பை நீக்குகிறார்கள். பாலில் இருக்கும் 20 முதல் 25 மைக்ரான் அளவு இருக்கும் கொழுப்பானது மிகச்சிறிய அளவில் அதாவது ஒரு மைக்ரான் அளவு உடைக்கப்படுகிறது. பிறகு பாலில் இருக்கும் கொழுப்பு பிரியாமல் பாலோடு கலந்து கொழுப்பின் அளவுக்கேற்ப பாக்கெட்களில் பால் நிரப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவையே நீல நிறம், பச்சை நிறம், ஆரஞ்சு நிறம், பிங்க் நிறம் என்று கொழுப்பு சேர்ப்பதை பொறுத்து பிரித்து கடைகளில் விற்கப்படுகிறது.


       தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் (Aavin)பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் நிறுவனம் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம். அதன் கீழ் தமிழக மக்களுக்கு விற்பனை செய்யப்படும் பால் பிராண்ட் தான் ஆவின். ஆவின் பால் பாக்கெட்கள் நீலம், பச்சை, மெஜந்தா, பழுப்பு ஆகிய நிறங்களில் வருகிறது.



நீலநிறம்
       ஆவின் நீலம் நிறப் பால் பாக்கெட் toned milk (சமன்படுத்திய பால்) என அழைக்கப்படுகிறது. 500 மில்லி லிட்டர் ஒரு பால் பாக்கெட்டில் 3 % கொழுப்பு உள்ளது. இவை எளிதில் ஜீரணமாகும் என்பதால் குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்களுக்கு ஏற்றது. இத்தகையோர் பாக்கெட் பால் பயன்படுத்துவதாக இருந்தால் நைஸ் பால் என்று அழைக்கப்படும் நீல நிற பாக்கெட்டை பயன்படுத்தினால் போதுமானது.


பிங்க்/மெஜந்தா நிறம்
       500 மில்லி லிட்டர் மெஜந்தா / பிங்க் ஆவின் பால் பாக்கெட்டெல் 1.5 % கொழுப்பு உள்ளது. இதை டையட் பால் பாக்கெட் என்று அழைக்கிறார்கள். இது ஒரு இருநிலை சமன்படுத்திய பால் ஆகும். உடல் குறைய நினைப்பவர்களும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த பாலை பயன்படுத்தலாம். அனைவருக்குமே ஏற்றது இந்த பால். ஏனெனில் இதில் குறைவான அளவு கொழுப்பு உள்ளது. அதனாலேயே இது டபுள் டோண்ட் மில்க் என்று அழைக்கப்படுகிறது.


பச்சை நிறம்
      இதை நிலைப்படுத்திய பால் பாக்கெட் என்றும் கூறுகின்றனர். 500 மில்லி லிட்டர் ஆவின் பச்சை நிற பாக்கெட்டில் 6 % கொழுப்பு இருக்கும். இதுவே முழுக் கொழுப்பு செறிந்த பால் ஆகும். இதில் கொழுப்புச்சத்து சற்று அதிகம் உண்டு. இதை இளம் வயதினர், நடுத்தர வயதில் இருப்பவர்கள் எடுத்துகொள்ளலாம். 40 வயதுக்குட்பட்டவர்கள் வரை இதை எடுத்துகொள்ளலாம்.


ஆரஞ்சு நிறம்
      கொழுப்புச்சத்து நிறைந்த பால் இது. இதை பெரும்பாலும் இனிப்பு பண்டங்கள் செய்யும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். பலரும் இவை அடர்த்தியாக இருக்கிறது என்று இதை அன்றாடம் பயன்படுத்துவது உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவிர்ப்பதே நல்லது. அதிக கொழுப்புச்சத்து கொண்டிருப்பதால் இவை ஃபுல் க்ரீம் மில்க் என்றும் அழைக்கப்படுகிறது. 100 கிராம் பாலில் 6 கிராம் கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. 3.4 கிராம் அளவு புரதமும், 4.9 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 740 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 904 கிலோ கலோரியும் உண்டு.


       அடுத்த முறை நீங்கள் பால் பாக்கெட் வாங்க செல்லும் போது இதைப் பார்த்துக் கவனித்து வாங்குவீர்கள் என்று நம்புகிறேன்.






Pages