தெனாலிராமனும்... கத்தரிக்காயும்...!!
ஒரு முறை தெனாலிராமனுக்கு கத்தரிக்காய் சாப்பிட வேண்டும் என்று அதீத விருப்பம் ஏற்பட்டது. அரண்மனைத் தோட்டத்தில் பிஞ்சு கத்திரிக்காய் அதிகமாக விளைந்திருப்பதைக் கண்டார்.
ஆனால் அது அரசாங்கத்திற்கு சொந்தமானது. நாம் உபயோகிக்கக்கூடாது என்ன செய்வது? என்னவென்றாலும் இன்று கத்தரிக்காய் சாப்பிட்டே தீருவது என்று தீர்மானித்த தெனாலிராமன், காவலாளிக்கு தெரியாமல் கத்தரிக்காய் அனைத்தையும் சத்தமில்லாமல் பறித்துக் கொண்டார்.
வீட்டுக்கு சென்று மனைவியிடம் இன்றைக்கு விதவிதமாய் கத்தரிக்காய் பதார்த்தம் செய் என்றார். அவரது மனைவியும் மறுபேச்சு பேசாமல் கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு என்று விதவிதமாக செய்து வைத்தார். இருவரும் சாப்பிட தயாரானார்கள்.
பிறகு தெனாலிராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர் ஒரு குடம் நிறைய தண்ணீரைக் கொண்டுவந்து திண்ணையில் படுத்திருந்த தனது மகன் மீது ஊற்றினார். பதறியடித்து எழுந்த மகனைப் பார்த்து வெளியே மழை பெய்கிறது, உள்ளே போய் படுத்துக் கொள். கத்தரிக்காய் சாப்பாடு ருசியாய் இருக்கிறது, சாப்பிட்டு விட்டு தூங்கு என்று கூறினார்.
அவனும் தூக்க கலக்கத்துடனேயே நன்றாக சாப்பிட்டான். பிறகு எல்லோரும் படுத்து நிம்மதியாய் தூங்கினார்கள்.
மறுநாள், தெனாலிராமன் அரண்மனை தோட்டத்தில் கத்தரிக்காய் பறித்த விஷயம் எப்படியோ மன்னருக்கு தெரிந்து போனது.
மன்னர் தெனாலிராமனை அழைத்து வரச் சொன்னார். தெனாலியைப் பார்த்து தெனாலிராமா! அரண்மனை தோட்டத்தில் கத்தரிக்காய் எல்லாம் காணாமல் போனது உனக்கு தெரியுமா? என்றார்.
தெனாலிராமனோ எதுவும் அறியாதது போல இருந்தார். மன்னரோ விடுவதாய் இல்லை. நீ தான் கத்தரிக்காய் அனைத்தையும் பறித்ததாக நான் கேள்விப்பட்டேன். உண்மையை ஒத்துக் கொள் என்றார். தெனாலிராமனோ இல்லவே இல்லை என்று சாதித்தார்.
மன்னர் உடனே தெனாலிராமனின் மகனை அழைத்துவர உத்தரவிட்டார். தெனாலிராமனது மகனை காவலாளிகள் அழைத்து வந்தார்கள். மன்னன் சிறுவனிடம் அன்பாக விசாரித்தார். தம்பி நேற்று உங்கள் வீட்டில் என்ன சாப்பிட்டீர்கள்? உடனே சிறுவன் சொன்னான் கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு மற்றும் சாதம் எல்லாம் சாப்பிட்டோம். மிகவும் ருசியாக இருந்தது என்று கூறினான்.
உடனே மன்னன் தெனாலிராமனைப் பார்த்தார், இப்போது மாட்டிக் கொண்டாயா தெனாலிராமா. இப்போதாவது உண்மையை ஒத்துக் கொள் என்றார். தெனாலிராமனோ விடாப்பிடியாக மறுத்தார். மன்னா, இவன் இரவில் கனவு கண்டு அதை உளறுகிறான். நன்றாக விசாரியுங்கள். நீங்கள் நம்பும்படியாக அவன் கூறினால் நான் உண்மை என ஒத்துக் கொள்கிறேன் என்றார்.
மன்னன் சிறுவனைப் பார்த்து மீண்டும் கேட்டார். குழந்தாய் நேற்று உங்கள் வீட்டில் என்ன நடந்தது என்று விளக்கமாக சொல்... சிறுவனோ நேற்று இரவு ஜோ வென்று மழை பெய்ததா! அப்பா என்னை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனாரா...! அப்போ கத்தரிக்காய் வைத்து சாப்பிட சொன்னார்களா...! சாப்பிட்டுவிட்டு பிறகு நான் உறங்கி விட்டேன் என்றான்.
தெனாலிராமனோ நேற்று மழை பெய்ததா மன்னா! நீங்களே சொல்லுங்கள் என்று மன்னரை பார்த்து கேட்டார். நேற்று நகரத்தின் எந்தப்பகுதியிலும் மழை பெய்யவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள்.
மன்னரும் சரி, தெனாலிராமன் சொன்னதைப்போல குழந்தை கனவில் கண்டதைத்தான் சொல்கிறான் என்று சொல்லி தெனாலிராமனையும் விடுவித்தார். மனதிற்குள் மகிழ்ந்து கொண்டே தெனாலிராமனும் இடத்தை காலிசெய்தார்.
பிறகொருநாள் மன்னரிடம் தாம்தான் கத்தரிக்காயை திருடியதாக ஒத்துக் கொண்டு நடந்தவைகளை சொல்ல மன்னர் தெனாலிராமனின் சாதுர்யத்தை மெச்சி பல பரிசுகளை அளித்து மகிழ்ந்தார்.