மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 19 March 2022

எது மகிழ்ச்சி?



          ஒரு சிறிய ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பாசிரியருக்கு ஒரு பழக்கம். தினம் ஒரு மாணவனை பள்ளியைவிட்டு எங்காவது வெளியே அழைத்துப்போவார். அந்த மாணவனுடன் பல விஷயங்களைப் பேசுவார்; அவன் குடும்பத்தை, அவன் படிப்பைப் பற்றி விசாரிப்பார். அந்த உரையாடலின் மூலமாக அவனின் குணம், திறமைகள், பொது அறிவு எல்லாவற்றையும் அறிந்துகொள்வார். ஒருநாள் அப்படி, அந்த ஆசிரியர் ஒரு மாணவனை அழைத்துக்கொண்டு வெளியே போனார்.



       இருவரும் நடந்து நடந்து ஊரைத் தாண்டி வந்திருந்தார்கள். வயல்வெளி பெரிதாக விரிந்திருந்தது. வயல் வேலையை முடித்துக்கொண்டு வந்திருந்த ஒரு விவசாயி, அருகிலிருந்த வாய்க்காலில் மெதுவாக முகம், கை, கால்களைக் கழுவிக்கொண்டிருந்தார். அவருடைய செருப்புகள் கரையில் கிடந்தன; பழசாகிப் போன, தேய்ந்துபோன செருப்புகள். மாணவன், அவரையும் செருப்புகளையும் பார்த்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.


   "சார்... இந்த செருப்பை எடுத்து அந்தப் புதருக்குள்ள ஒளிச்சு வெச்சிடுவோமா? அதோ... ஓடையில முகம் கழுவிக்கிட்டிருக்காரே... அந்த விவசாயி கரைக்கு வருவாரு. செருப்பைத் தேடுவாரு... அதைக் காணாம அவர் முகம் படுற பாட்டை நாம ஒளிஞ்சிருந்து பார்க்க ஜாலியா இருக்கும்’’


      இதைக் கேட்ட அந்த ஆசிரியரின் முகம் வேதனையால் வாடியது. "இல்லப்பா... இப்படியெல்லாம் யோசிக்கிறதே தப்பு. அதுலயும் ஏழைகளோட வாழ்க்கையில விளையாடுறது ரொம்ப ரொம்பத் தப்பு’’ என்றவர் ஒரு கணம் யோசித்தார். "நான் ஒண்ணு சொல்றேன்... அது மாதிரி செய்வோமா?’’


"சொல்லுங்க சார்...’’


    "அந்த விவசாயியோட செருப்புகள்ல என்கிட்ட இருக்குற கொஞ்சம் பணத்தையும் உன்கிட்ட இருக்குற காசுகளையும் வைப்போம். நாம போய் புதருக்குள்ள ஒளிஞ்சுக்குவோம். அதைப் பார்த்துட்டு அவர் முகத்துல என்ன ரியாக்‌ஷன் தெரியுதுனு கவனிப்போமா?’’


"சரி சார்.’’


    ஆசிரியர் தன் பாக்கெட்டில் இருந்து கொஞ்சம் கரன்ஸிகளையும், நாணயங்களையும் எடுத்தார். அந்த விவசாயியின் தேய்ந்த இரு செருப்புகளிலும் அவற்றைச் சரி பாதியாக வைத்தார். பிறகு இருவரும் புதருக்குள் போய் ஒளிந்துகொண்டார்கள். அதே நேரம், விவசாயி கரையேறினார். தன்னுடைய ஒரு செருப்பில் காலை நுழைத்தார். வித்தியாசமாக ஏதோ இருப்பதை உணர்ந்தார். செருப்பைக் கவனித்தார். அதற்குள் சில கரன்ஸிகளும் நாணயங்களும் இருந்தன. அவற்றை எடுத்தவர், இது யாருடையதாக இருக்கும் என்று அக்கம் பக்கம் பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. அந்த ஏழை விவசாயி அவற்றை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.


      அடுத்து இன்னொரு செருப்பில் காலை நுழைத்தவர், அதிலும் வித்தியாசமாக ஏதோ படுவதை உணர்ந்தார். அதற்குள்ளும் கரன்ஸிகளும் நாணயங்களும்! அசந்துபோனார் அந்த விவசாயி. அப்படியே மண்டியிட்டு தரையில் அமர்ந்தார். ஆகாயத்தைப் பார்த்துத் தன் இரு கைகளையும் விரித்துக்கொண்டார்.


   "கடவுளே..! உன் கருணையே கருணை! வீட்டில் நோயில் படுத்த படுக்கையாகக் கிடக்குற என் மனைவிக்கு மருந்து வாங்க நான் என்ன செய்றது, இன்னும் ரெண்டு நாளைக்கு அப்புறம் குழந்தைகளோட பசி போக்க தானியம் வாங்க என்ன செய்யறதுனு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்... காலையில கடவுளே உன்னை நினைச்சு வேண்டவும் செஞ்சேன். கேட்டதைக் கொடுத்துட்டே சாமி....’’ அவர் கண்ணீர்விட்டு அழுதார். பிறகு தன் வீடு நோக்கிக் கிளம்பிப் போனார்.


     அவர் போனதும் ஆசிரியரும் மாணவரும் வெளியே வந்தார்கள். ஆசிரியர் கேட்டார்.... ``இப்போ சொல்லு... உனக்கு எது மகிழ்ச்சியாக இருந்திருக்கும்? அவரோட செருப்பை ஒளிச்சுவெச்சிருந்தாலா... இல்லை இப்போ அவருக்குப் பணம் கொடுத்தோமே... அதுவா?’’


      "சார்... எனக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்தீங்க. இதை என்னைக்குமே மறக்க மாட்டேன். பெறுவதைவிட கொடுப்பது எவ்வளவு பெருசுங்குறதுக்கு அர்த்தம் புரிஞ்சிடுச்சு. நன்றி சார்...’’

சர்வதேச மகிழ்ச்சி தின வாழ்த்துக்கள்...

Pages