தீரன் சின்னமலை
இந்திய விடுதலைக்காக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை 1756ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி.
இவர் இருந்த பகுதி மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு வழங்கப்பட்டு வந்தபோது, ஒருமுறை இவர் வரிப்பணத்தை கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார்.
வரி கொண்டு சென்ற ஊழியரிடம் 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்" என்று கூறினார். அப்போதிலிருந்து, 'சின்னமலை" என்று அழைக்கப்பட்டார்.
இவர் ஓடாநிலை என்ற ஊரில் கோட்டை கட்டி இளைஞர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார். பல ஆயுதங்களையும் தயாரித்தார். 1801, 1804-ல் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.
இவரை போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி செய்து சமையல்காரர் மூலம் இவரையும், இவரது சகோதரர்களையும் பிடித்து தூக்கிலிட்டது. பிறந்த மண்ணின் விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்த தீரன் சின்னமலை 1805ஆம் ஆண்டு மறைந்தார்.