மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 7 October 2022

அன்பு பிடியில் அகப்பட்டவன்



       ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில் கடவுள் செய்த லீலைகள் ஒவ்வொரு பல உட்பொருட்களைக் கொண்டது. அன்பின் அவதாரம். கீதையின் நாயகன். அன்பினால் மட்டுமே அவனைக் கட்டி போட முடியும். முகநூல் படித்தது.


          கோபியர்கள் யசோதையின் வீட்டுவாசலில் நின்று, யசோதா! யசோதா என்று குரல் கொடுத்தனர். யசோதைக்கு அவர்களது அலறல் குரலே காட்டிக் கொடுத்து விட்டது. தன் பிள்ளையாண்டான் கண்ணன் அவர்களிடம் ஏதோ வேலைகாட்டி விட்டான் என்று! என்னம்மா பிரச்னை! உள்ளே வாங்களேன்! மோர் சாப்பிட்டுக்கொண்டே பேசலாம், என்றாள். 



       நீ கொடுக்கும் மோர் எங்கள் சூட்டைத் தணிக்காது. ஏனெனில், எங்களுக்கு வந்திருப்பது கோபச்சூடு. அதற்கு உலகில் மருந்து கிடையாது. விஷயத்தைக் கேள்! உன் மகன் என்ன செய்தான் என்று! என்று கொதிப்புடன் பேசினர் கோபியர். ஏதேனும் குறும்பு செய்துவிட்டானா? ஆம்... செய்தான்... அது குறும்பு வகையில் சேராது. சொல்லவே நா கூசுகிறது, அவனது அந்த சேஷ்டையைச் சொல்ல! என்று தயங்கியவர்களில் ஒருத்தியிடம் ரகசியமாகக் காதில் சொல்லும்படி கேட்டாள் யசோதா. அவள், உன் மகன் நாங்கள் குளித்துக்கொண்டிருந்த குளக்கரையிலுள்ள மரத்தில் அமர்ந்திருந்தான். அவன் இருப்பதை கவனியாத நாங்கள், எங்கள் உடைகளைக் கரையில் வைத்துவிட்டு நீராடினோம். இந்தப் பொடியன் மரத்தில் இருந்தபடியே ஒரு குச்சியால் எங்கள் ஆடைகளை எப்படியோ எடுத்து ஒளித்து வைத்துவிட்டான்.


     நீராடிய நாங்கள் உடைகளைத் தேடினோம். கிடைக்கவில்லை, திடீரென புல்லாங்குழல் இசை எங்கிருந்தோ வர உற்றுப்பார்த்தோம். மரத்தின் மேலிருந்து அவன் குழல் இசைத்துக் கொண்டிருந்தான். அவனிடம் எங்கள் ஆடைகள் இருந்தன. அவற்றைத் தரும்படி கெஞ்சினோம். அதைப் பெறுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது, என்றனர். பிள்ளை வீட்டுக்கு வந்தான். பால் வழியும் முகம்... அப்பாவியாய்... அம்மா பசிக்குது! அப்பம் வைத்திருக்கிறாயா! நேற்று நெய் சீடை செய்தாயே! கொஞ்சம் கொடேன்! உன் கைவண்ணத்தில் செய்த பணியாரம் ருசியாக இருக்கும். ஏதாச்சும் கொடேன்! கோபத்தில் உச்சத்தில் இருந்தாள் அம்மா. அவனிடம் ஒன்றும் பேசவில்லை. அப்படியே அவளது முகவாயைத் திருப்பி, அம்மா... எவ்வளவு நேரமா கேட்கிறேன், என் செல்ல அம்மா இல்லே... ஏதாச்சும் தாம்மா, என்று ஒருவேளை உணவுக்காக கெஞ்சினான், உலகத்துக்கே படியளக்கும் அந்த பரமாத்மா... என்ன செய்வது! மனிதனாகப் பிறந்து விட்டானே! அம்மா உரலருகே அவனை இழுத்துச் சென்றாள். படபடனெ அவன் வயிற்றோடு சேர்த்து அதைக் கட்ட முயன்றாள். கயிறு போதவில்லை. ஒரு பணிப்பெண்ணை அழைத்து, இவனைப் பிடித்துக்கொள், இன்னொரு கயிறை எடுத்து வருகிறேன், என்று உள்ளே போனாள். பணிப்பெண் கண்ணனைப் பிடித்துக் கொண்டாள்.


    அம்மா! எதற்காக என்னைக் கட்டப்போகிறாய்! நான் தவறேதும் செய்யவில்லையே! அவன் சிணுங்கினான். பழைய கயிறோடு எடுத்து வந்த கயிறை இணைத்துக் கட்டினாள். இப்போதும் அவனைக் கட்டப் போதுமான அளவு கயிறின் நீளம் இல்லை. மீண்டும் ஒரு துண்டு கயிறை எடுத்து வந்தாள். அப்போதும் போதவில்லை. இதென்ன அதிசயம்! கயிறு நீளமாக இருக்கிறது. இவன் இடுப்போ மிக மிக சிறியது. அப்படியிருந்தும் கட்டமுடியவில்லையே... ஏன்? அவள் குழம்பினாள். இந்த இனிய காட்சியை தேவர்கள் மேலிருந்து ரசித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர், மாடு மேய்ப்பவன் போன்ற வேடத்தில் யசோதை முன் வந்தார். அம்மா! அவனை எப்படி கட்ட முடியும்? அவன் நாராயணனின் அவதாரம் ஆயிற்றே! உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் அவனை சிறு கயிறால் கட்ட முடியாது என்பதை யோசித்துப் பார்த்தாயா? என்றார். யசோதைக்கு புரிந்தும் புரியாததும் போல இருந்தது. அவர் தொடர்ந்தார். அவனைக் கட்ட ஒரே ஒரு கயிறு தான் இருக்கிறது. மிரட்டினால் அவன் பணியமாட்டான். அன்புக்கு அடிபணிவான். அன்பால் தான் அவனைக் கட்ட முடியும், என்று சொல்லிவிட்டு அகன்று விட்டார். யசோதையின் கண்களில் நீர் துளிர்த்தது. கண்ணனை அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பென்னும் அன்பில் மிதந்த அவனது இடுப்பில் கயிறு தானாகவே சுற்றிக் கொண்டது.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம். 

Pages