மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 15 October 2022

உலக கைகழுவும் தினம்...


          இன்று உலக கை கழுவும் தினம். இதற்கெல்லாம் ஒரு தினம் என்று தனியாக கடைப்பிடிக்க வேண்டுமா என்று கேட்கலாம். ஆனால் ஆரோக்கிய ரீதியாக இது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். ஆனால் அது எவ்வளவு உண்மையானது என்பதை கொரோனா வந்து நமக்கு நிரூபித்துவிட்டது. கொரோனா தொற்றுக்கு சானிடைசர் காட்டிலும் சிறந்தது கைகளை சோப்பு போட்டு கழுவுவது தான் என்பதை பலமுறை வலியுறுத்துகிறார்கள் சுகாதாரத்துறை நிபுணர்கள்.



        கை கழுவுவது சிறிய விஷயம் தான். ஆனால் இதை முறையாக செய்யும் போது உடலில் நோய்த்தொற்றுகள் தவிர்க்கப்படுகிறது. தண்ணீரில் கைகளை கழுவினாலே சுத்தம் செய்தது என்று நினைக்க வேண்டாம். அதற்காக கைகழுவிக்கிட்டே இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.

         கைகளை வெறும் நீரில் கழுவாமல் சோப்பு அல்லது சோப்பு நீர் போட்டு தேய்த்து கழுவுவதுதான் முறையான கைகழுவுதல் ஆகும். இப்படி செய்வதன் மூலம் தொற்று நோய்களிலிருந்து நம்மை காத்துகொள்ளலாம்.


        சோப்பு போட்டு கைகளை உடனே கழுவாமல் 30 விநாடிகளாவது கைவிரல்கள் நக இடுக்குகள் விரல் இடுக்குகளைக் கழுவுவதன் மூலம் 80 சதவீதமான தொற்று நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்

        யூனிசெப் அமைப்பு அளித்த பேட்டி ஒன்றில் இந்தியாவில் 53 % மக்கள் மட்டுமே கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைக் கழுவுவதாக தெரிவித்துள்ளது.



       வளரும் நாடுகளில் இருக்கும் 5 வயதுக்குட்பட்ட 40 இலட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா நோய்க்கு பலியாகின்றனர். முறையாக கை கழுவுவதன் மூலம் இந்த நோய்த்தொற்று வராமல் குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உரிய முறையில் கைகளைச் சுத்தம் செய்யாததால் காலரா, டைஃபாய்டு, வாந்தி பேதி போன்றவை வருவதற்கு வாய்ப்பு உண்டு.



எப்போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்

       குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பும், விளையாடிய பிறகும், சாப்பிட்ட பிறகும், கழிப்பறைகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே வீட்டு பெரியவர்கள் கழிப்பறையைப் பயன்படுத்த கற்றுத்தரும் போதும் மறக்காமல் இதைக் கற்று தர வேண்டும்.


      பெண்கள் சமையல் செய்யும் போது கைகளை முறையாக சோப்பு போட்டு கழுவிய பிறகு தான் சமைக்க வேண்டும். சமைக்கும் போது மட்டுமல்ல உணவு பொருள்களைப் பயன்படுத்தும் போதும் காய்களை நறுக்கும் போதும் என ஒவ்வொரு முறையும் கைகளை நன்றாக கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.


       பொதுவாக கழிப்பறைப் பயன்பாட்டுக்குப் பிறகு சிறுநீர், மலம் கழித்த பிறகு உரிய முறையில் கைகளைக் கழுவாமல் இருப்பது அதிக ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்கிவிடும். ஏனெனில் மலம் கழித்த பிறகு வெறும் நீரால் கைகளை கழுவும் போது, மலத்தின் வழியாக கைகளில் கிருமிகள் பரவ அதிக வாய்ப்ப்புண்டு. அதனால் கண்டிப்பாக சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவுவதை அனைத்து வயதினருமே கடைப்பிடிக்க வேண்டும்.


         வெளியிலிருந்து வரும் போது சோப்பு போட்டு தேய்த்து ஓடும் நீரில் கண்டிப்பாக கைகளை 30 விநாடிகள் தொடர்ந்து கழுவ வேண்டும். அதுவரை கைகளை முகத்தில் தடவுவதோ வாயருகில் கொண்டு செல்வதோ, கண்களை துடைப்பதோ கண்டிப்பாக செய்யகூடாது. இதை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும்.

Pages