மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 20 May 2023

பழனி மலையும்... அற்புதங்களும்...


       ஆனைமலையின் ஆறு முகடுகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த பொதினி என்று அழைக்கப்பட்ட பழனி மலையின் சிறப்புகளைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்...!



        அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது ஆகும். இக்கோயில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது பழைய சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரத்தில் அமைந்துள்ளது. 



       பழனி என்பது ஒரு மலையின் பெயர் ஆகும். பழனி மலையையும், மலையடிவாரத்திலுள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் கொண்ட நகரமே பழனி அழைக்கப்படுகின்றது. இக்கோவில் "பழனி" என என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மகன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததன் காரணமாக, "பழம் நீ" என வழங்கப் பெற்றுப் பின் பழனி என மருவியது.


 இது சங்ககாலத்தில் பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பொதினி என்ற பெயர் நாளடைவில் பழனி என்று ஆகிவிட்டதாக அகநானூறு கூறுகின்றது.



       பழனி மலையில் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் சிலைகள் பழனிக்காக உலகம் சுற்றும் போட்டியைக் குறிக்கின்றன, மேலும் முருகன் கோயிலுக்கு தெற்கே மலையில் கைலாசநாதர் கோயில் காணப்படும், அது இறைவியும் முருகனை பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றது.


பொதினி மலையின் வரலாறு: 

        பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர், தனது சீடன் இடும்பாசுரனை கயிலைக்குச் சென்று முருகனுக்கு அருகில் உள்ள கந்த மலையில் காணப்படும் சிவசக்தி வடிவில் சிவகிரி மற்றும் சக்திகிரி என்ற இரண்டு சிகரங்களைக் கொண்டு வந்து வழிபடுமாறு அறிவுறுத்தினார். இடும்பாசுரன் பெரும் பக்தராக இருந்ததால், அகஸ்தியரின் உத்தரவின் பேரில், அவர் தனது மனைவி இடும்பியுடன் கயிலைக்கு வந்து, ஒரு பெரிய பிரம்ம தண்டத்தில் இருபுறமும் சிவகிரியையும் சக்திகிரியையும் தோளில் சுமந்து வந்தார்.


         அவ்விரு கிரிகளையும் திருவாவினன் குடியில் நிலைபெற செய்து, இடும்பனுக்கு அருள்புரிய பெருவிருப்பம் கொண்டு முருகப்பெருமான் குதிரை மேல் செல்லும் அரசனாக வடிவெடுத்து வந்தார். வழி தெரியாமல் இடும்பன் தவித்து கொண்டு நின்றார். முருகப்பெருமான் இடும்பனை திருவாவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று இளைப்பாறி போகும்படி கூறினார். அதற்கு இடும்பனும் காவடியினை இறக்கி வைத்து இளைப்பாறினான். மீண்டும் காவடியை தூக்க முடியவில்லை. அதன் காரணத்தினை ஆராய்ந்தார் இடும்பன்.


      அப்போது சிவகிரி மலையில் ஒரு சிறுவன் கையில் சிறு தடியுடன் பசுவைப் போல் நிற்பதை இடும்பன் கண்டான். அச்சிறுவனை மலையை விட்டு இறங்கி வருமாறு இடும்பன் கட்டளையிட்டான். ஆனால் அச்சிறுவன் இது தனக்கு சொந்தமானது எனக் கூறினான். இதனால் ஆத்திரமடைந்த இடும்பன் அச்சிறுவனை தாக்க முயன்று பின் கீழே விழுந்தார். அப்போது இடும்பனின் மனைவி இடும்பியும், அகஸ்திய முனிவரும் ஓடிவந்து பிரார்த்தனை செய்ய, சிறுவனாக வந்த முருகன், இடும்பனை உயிர்த்தெழ செய்தார்.



        இடும்பனின் அன்பையும் பக்தியையும் ரசித்த முருகப்பெருமான் இடும்பனுக்கு தனது காவல் தெய்வமாகப் பட்டம் அளித்து, தன் சன்னதிக்கு வரும் அனைவருக்கும் இடும்பனை போன்று சந்தனம், பால், பூ பண்ணீர் ஆகியவற்றை வழங்கி அருள்பாலிப்பதாக வாக்களித்தார். அன்று முதல் முருகன் கோவில்களில் காவடி எடுக்கும் வழக்கம் இருந்து வருகின்றது.


    மலைமீதுள்ள முருகப்பெருமானை வழிபட செல்பவர்கள் முதலில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள இடும்பன் கோயிலை வழிபட வேண்டும். இடும்பன் சிறந்த அருளாளர்.


முருகன் சிலையின் வரலாறு:

     இச்சிவகிரியின் உச்சியில் தண்டாயுதபாணி என்றழைக்கப்படும் முருகன் கோவில் உள்ளது. பழனி மலை முருகன் கோயில், பெரியநாயகி கோயில் மற்றும் திருவாவினன்குடி கோயில் என்ற மூன்று கோயில்கள் தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

     பழனி தண்டாயுதபாணி சிலைக்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி போன்றவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.


    இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியினுடைய சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகின்றது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்பது முழு அபிஷேகமானது சந்தனமும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதியானது சித்தரின் உத்தரவினால் பக்தர்களுக்கு வழங்கபடுகின்ற ஒரு பிரசாதம். அது இங்கு கிடைப்பது மிக புண்ணியம் என்பது நம்பிக்கை.



       பழனி மலை முருகனுக்கு நாள் ஒன்றிற்கு ஆறு முறை அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யபடுகின்றது. இந்த அபிஷேகம் மற்றும் அலங்காரம் ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்க்குள் முடிக்கப்படுகிறது. இந்த அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்த பின், அடுத்த அபிஷேகம் செய்யும் வரை முருகனுக்கு மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதன்பது கிடையாது.


        இரவு நேரங்களில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவத்தில் சந்தன காப்பு சார்த்தபடுகின்றது. முருகனின் விக்ரகத்தின் புருவங்களுக்கு இடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படுகின்றது. முற்காலத்தில் சந்தன காப்பினை முருகனுடைய முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பிற்கலங்களில் இம்முறை மாற்றப்பட்டது.


      தண்டாயுதபாணி விக்ரகம் என்பது மிகுந்த சூடாக இருக்கும். அதனால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்தில் இருந்து நீர் வெளிப்படுகிறது. இந்நீரை அபிஷேக தீர்த்ததோடு கலந்து, காலை அபிஷேகம் நடக்கின்ற போது, அங்கு இருக்கின்ற பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.


      தண்டாயுதபாணியின் நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல மிக தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணமாகும்.


      தண்டாயுதபாணியின் சிலையை சுற்றி எப்போதும் ஒரு விதமான சுகந்த மணம் பரவி நிற்கும்.  தண்டாயுதபாணி முருகனின் சிலையை செய்வதற்கு போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் சுமார் ஒன்பது வருடம் ஆகும்.


       முருகர், அம்பாள், அகத்தியர் இவர்ளின் உத்தரவிற்க்கு பிறகு தான் போகர் இப்படி ஒரு சக்தி மிகுந்த சிலையினை செய்ய முயற்ச்சி எடுத்தார். இதற்காக சுமார் 4000 மேற்பட்ட மூலிகையினை பல்வேறு இடங்களிலும் சென்று கொண்டு வந்தார் போகர்.


     இதில் 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தினை போகர் சொற்படி தயார் செய்தனர். இது ஒரு பொது நல எண்ணத்தோடு செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தினை குறைத்து சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு முக்கிய தகவலும் உண்டு.


     போகர் முருகனுடைய சிலையை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதன் காரணமாக, மலை நாட்டிலுள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வமாக விளங்குகிறது. சித்தர் போகரின் ஜீவசமாதி கோவில் வளாகத்திலேயே உள்ளது.

       கற்சிலைகளால் ஆன பல கோவில்கள் சிதிலமடைந்து வருகின்றதில், இந்த கோவில் மேலும் மேலும் வளர்ந்து வருவதற்கும் சித்தர்களின் மகிமை தான் காரணம் என பலரும் நினைக்கின்றனர்.


            பழனியில் இரண்டு மரகத லிங்கங்கள் உள்ளன. ஒன்று முருகனுடைய சன்னதியிலும், இன்னொன்று போகருடைய சமாதியின் மேல் உள்ளது. இந்த இரண்டு லிங்கங்களும் போகர் பூஜை செய்ததாக கூறப்படுகின்றது.


          பழனி முருகன் கோவில் மலையை சுற்றிலும் சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு மரம், செடி, கொடிகள் நிறைந்த சோலைகளும் அழகிய கிரிவல பிரகாரமும், இப்பிரகாரத்தின் நான்கு திருப்பங்களில் பெரிய மயிலின் உருவ சிலைகள் உடைய மண்டபங்களும் இருக்கின்றது. இங்கு கிரிவலம் மிக சிறப்புடையதாக அமைந்துள்ளது. முன்பக்கம், மலை பாதையின் அடிவாரத்தில் பாத விநாயகர் கோவிலும், கோவிலுக்கு எதிரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது. கோவில் அருகிலுள்ள மயில் மண்டபத்தில் இருந்து சுமார் 695 படிக்கட்டுகள் மலை கோவிலுக்கு அழைத்து செல்கின்றது. வழி நெடுகிலும் சற்று இளைப்பாறுவதற்கு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல தெய்வ ஆலயங்களும் இருக்கின்றது.


      முருகனின் மூன்றாவது படைவீடான இம்மலைக்கோயிலில் முருகப்பெருமான் தனது ஆண்டி கோலத்தின் மூலம் குன்றின் உச்சியில் கோவில் கொண்டிருப்பதன் மூலமும் ஒரு உண்மையை நமக்கு போதிக்கின்றார். இங்கு ஆனந்தமயமான முருகனை சென்றடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமென்றால் மனதை இறைவனிடம் செலுத்தினால் மட்டும்தான் முடியும். 


      மற்ற திருத்தலத்தை போல இல்லாமல் இங்கு இரவு நேர பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவது இல்லை. இங்கு அதிகாலை முதல் இரவு பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றின் மூலம் அபிஷேகங்கள் நடந்தவாறு இருக்கின்றது. அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை கண்டவை. 


      முனிவர்களால் பின்பற்றப்பட்ட ஞான தண்டாயுதபாணி, பின் சேர மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக கேரள மக்கள் அதிகளவில் வழிபட வருவதாகவும் கூறப்படுகிறது. சபரிமலை ஐயப்ப சுவாமி மற்றும் குருவாயூரப்பனை தரிசிக்க வருபவர்கள் பழனி சென்று ஸ்தல தரிசனம் முடிக்க பழனி இறைவனை வழிபட வேண்டும் என்பது மரபு.


      இங்கு நடந்து மலையில் ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதி இருக்கின்றது. திருப்பதி கோவிலின் பிரசாதமாக லட்டு எப்படி பிரசித்தி பெற்றதோ, அதேபோல் பழனி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பழனி பஞ்சாமிர்தமும் உலகப்புகழ் பெற்றது. இந்த கோவிலின் பஞ்சாமிர்த பிரசாதத்தை உண்பவர்கள், உடல் நோய்களில் இருந்து விடுதலை பெறுவதாக அனுபவசாலிகள் தெரிவிக்கின்றனர். மேற்கே கேரள மாநிலத்தை நோக்கிய இக்கோயிலில் தண்டாயுதபாணி அமர்ந்திருப்பதால், பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமான மலையாள பக்தர்கள் வந்து செல்கின்றனர்.


       பழனி மலை முருகன் கோவில், தமிழக கோவில்களில், கோடிக்கணக்கான பக்தர்களின் காணிக்கை பெறும் பெரிய கோவில். பழனிப் பெருமானை வழிபடும் சில பக்தர்கள் தங்கள் தொழிலிலும், வியாபாரங்களில் அவரைப் பங்குதாரராகக் கருதி, அதிக லாபம் சம்பாதித்து, அந்த லாபத்தில் ஒரு பகுதியை இந்தக் கோயிலின் உண்டியலில் காணிக்கையாகப் பழனி முருகனுக்குச் செலுத்துகிறார்கள். திருப்பதியில் தன் விருப்பம் நிறைவேற மொட்டை அடிப்பது போல் பழனியிலும் முருகனுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். இங்குள்ள போகர், சித்தரின் சமாதியில் வழிபடுவதால், இந்த பழனி மலையில் மாய வடிவில் வாழும் போகர் நம் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறார். ஆன்மிக அறிவு, திருமணம், குழந்தைகள், வேலை வாய்ப்பு, தொழில், வியாபாரம் போன்றவற்றில் வெற்றி பெற வேண்டி அதிகமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

ஓம்.. சரவணபவ...

Pages