சாப்பிடுவதற்கு ஏற்ற திசை எது?
இந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆரோக்கியம் அதிகரிக்குமாம்..!!
சாப்பிடுவதற்கு ஏற்ற திசை எது?
நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று உணவு. உணவு இல்லை எனில் நம்மால் உயிர் வாழ முடியாது. நாம் சாப்பிடும் உணவே நம் உடலை வளர்க்கிறது. நம் உயிரைக் காக்கிறது. அதனால் தான் திருமூலர், "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்று கூறியுள்ளார்.
ஒருவேளை உணவு சாப்பிடுபவர்கள் யோகிகள். இருவேளை உணவு உண்பவன் போகி (அனுபவிக்கப் பிறந்தவன்). மூன்றுவேளை உணவு உண்பவன் ரோகி (நோயாளி) என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நாம் சாப்பிடும் போது பாதி வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காலியாக இருக்க வேண்டும். இவ்வாறு சாப்பிடுவது தான் ஆரோக்கியமான உணவு முறை ஆகும்.
உணவுகளை சாப்பிடுவதில் பல முறைகள் உள்ளன. நாம் சாப்பிடும் போது எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட பலன்களைப் பெறலாம்? என்பதை தெரிந்து கொள்வோம்..
திசைகளும், பலன்களும் :
கிழக்கு திசை :
கிழக்கு திசை இந்திரனுக்கு உரிய திசையாகும். எனவே, கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது ஆயுள் நீடிக்கும். அதுமட்டுமின்றி உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
மேற்கு திசை :
செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு உரிய திசை மேற்கு திசையாகும். எனவே, மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் வீட்டில் செல்வம் பெருகும். நாம் செய்யும் தொழில் வளர்ச்சி அடையும்.
தெற்கு திசை :
எமனுக்கு உரிய திசை தெற்கு திசை. இந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் புகழ் சேரும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்கள், கலைஞர்கள், நல்ல அறச் செயல்களுக்காக பாடுபடுபவர்கள், தெற்கு திசையை நோக்கி சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு நற்பெயரும், புகழும் கிடைக்கும்.
வடக்கு திசை :
வடக்கு திசை சிவனுக்கு உரிய திசையாகும். இத்திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், நோய் வாய்ப்படும் நிலை உண்டாகும்.
அதேபோல், ஒருவர் தங்களது வீட்டை தவிர்த்து உறவினர்கள் வீட்டிற்குச் சென்றால், அங்கு மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அந்த உறவு பகையாகிவிடும்.
எப்போதும் தரையில் அமர்ந்து கைகளால் தான் சாப்பிட வேண்டும். நன்கு சுத்தம் செய்த கையால் சாப்பிடுவதால் பல நோய்கள் வரவிடாமல் தடுக்கலாம். கைகளால் உணவை அள்ளி சாப்பிடும் போது ஜீரண சக்தி அதிகரிக்கிறது. ஐந்து விரல்களையும் குவித்து சாப்பிடுவதை சூட்சும முத்திரை நிலை என்பர். இதனால் ஜீரண மண்டலம் துரிதமாகச் செயல்படுகிறது.