மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 14 January 2024

பொங்கல் விழா


          தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். தமிழர் வாழும் அனைத்து இடங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்று இந்த தை பொங்கல். சூரிய கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 


பொங்கல் விழா:

       பொங்கல் பண்டிகை தை மாதம் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிடப்பட்ட நெல் தை மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு நல்ல விளைச்சலை தரும் மாதமே இந்த பொங்கல். இந்த விளைச்சலை கொடுத்த இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக சர்க்கரை பொங்கல் சமைத்து மாட்டுக்கும், சூரியனுக்கும் படைத்து நாமும் உண்டு வாழ்வது தான் இந்த பொங்கல் பண்டிகை.


       பொங்கல் விழா வருவதற்கு முன்னரே பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க ஆரம்பித்துவிடுவார்கள். வீட்டை சுத்தப்படுத்துவது, வீட்டிற்கு புதிய சுண்ணாம்பு அடிப்பது போன்று ஊரே திருவிழா கோலத்தில் காணப்படும். பொங்கல் விழா இந்த திருநாட்டில் நான்கு நாள் கொண்டாடப்படுகிறது.


போகி பொங்கல்: 
      மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் இந்த போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையாகும். பழைய பொருட்களையும், உபயோகமற்ற பொருட்களையும் தூக்கி எரியும் வழக்கம் உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை மட்டுமல்ல நம் மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களையும், தீய எண்ணங்களையும் விட்டொழிப்பதற்காக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை அனைவரது வீட்டிலும் கொண்டாட மாட்டார்கள் ஒரு சில வீட்டில் கொண்டாடுவார்கள்.

       போகி பண்டிகை கொண்டாடும் வீட்டின் கூரையில் பூலாப்பூ, காப்பு கட்டுதல் சொருகுவார்கள். சங்க காலத்தில் இந்த தினத்தன்று ஒப்பாரி வைப்பது பழக்கமாக இருந்தது என ஆய்வுகள் கூறுகின்றன, ஒப்பாரி வைப்பதற்கான காரணம் புத்தர் இறந்த தினமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.


தைப்பொங்கல்:
        தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முதல் நாள் புது பானை, புது ஆடை வாங்குவார்கள். வீட்டின் வாசலில் பொங்கல் கோலம் போடுவார்கள்.

      வீட்டின் முன் புது அடுப்பு வைத்து, புது பானையில் புது அரிசி இட்டு முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். பொங்கலுக்கு புதிய கரும்பு, புதிய காய்கறிகள் என அனைத்தையும் புதியவைகளையே பயன்படுத்துவார்கள். பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து பொங்கலிட ஆரம்பிப்பார்கள். பொங்கல் பொங்கி வரும்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் பொங்கலோ! பொங்கல் என்று கூச்சலிட்டு வரவேற்பார்கள்.

     பொங்கல் பொங்கியதும் அதை சூரிய தேவனுக்கும், கால் நடைக்கும் படைத்து விட்டு பின்பு உண்பார்கள்.


மாட்டு பொங்கல்:
           பொங்கல் பண்டிகை வரலாறு:தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது மாட்டு பொங்கல். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

     மாட்டு பொங்கலன்று மாட்டுத் தொழுவத்தை மற்றும் கால்நடைகளை சுத்தம் செய்து அதன் கொம்புகளில் மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து, மாலை அணிவித்து, தொழுவத்திலே பொங்கல் செய்து வழிபடுவார்கள்.

      தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மாட்டுப் பொங்கலன்று கொண்டாடப்படுகிறது. மதுரையில் உமிழ் நீர் தெளித்தல் என்ற மரபு பின்பற்றப்படுகிறது.


காணும் பொங்கல்:
       இந்த பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது காணும் பொங்கல் என்று அழைப்பார்கள். இது பெண்களுக்கான பண்டிகை ஆகும். காணும் பொங்கலன்று மக்கள் அனைவரும் தங்களது உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர்.

       பண்டிகையன்று பல போட்டிகள் ஒவ்வொரு ஊர்களிலும் நடக்கும். கோலப்போட்டி, உரி அடித்தல், மரம் ஏறுதல் போன்ற போட்டிகள் இருக்கும்.

     நான்கு நாட்களும் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

        அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ...


Pages