மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 24 March 2024

அன்புக்குக் கட்டுண்ட கண்ணன்


      ஒருநாள், கோபி ஒருத்தி தோட்டத்துக் கட்டுத்தறியில் கண்ணனைக் கட்டிப் போட்டுவிட்டு, கையும் மெய்யுமாகப் பிடித்து வைத்திருந்த கள்வன் கண்ணனை தாய் யசோதையிடம் ஒப்படைக்க, கண்ணனின் வீட்டுக்குச் சென்று அவன் தாயைக் கையோடு அழைத்து வந்தாள்.


       பார், உன் மகன் படுத்திய பாட்டை என்று உறியை உடைத்து, வீட்டிலே கண்ணன் சிந்தியிருந்த தயிரையும் பாலையும் காட்டி, தோட்டத்துக்கு அழைத்துச் சென்றாள். பாவம், அங்கே, அவள் கட்டிய கட்டுத்தறியில் கண்ணன் இல்லை; ஒரு கன்றுக்குட்டிதான் நின்றிருந்தது. கோபத்தோடு வந்த யசோதை ஒரு பெருமூச்சு விட்டாள். கட்டப்பட்டது தன் மகனில்லை என்ற பெருமை அவளுக்கு. இல்லாததையும், பொல்லாததையும் என் குழந்தை மீது ஏன் சொல்கிறாய்? என்று அந்தப் பெண்ணைக் கடிந்துகொண்டாள். 


      அந்த கோபிகைக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கண்ணனை யசோதையிடம் காட்டிக் கொடுப்பது போல காட்டிவிட்டு, அவள் கடிந்து கொள்ளும்போது கண்ணனுக்காகப் பரிந்து பேசி, அவன் அன்பைப் பெற அவள் போட்ட கணக்கு தப்பித்தது.

    யசோதை சென்றதும், மீண்டும் கன்றுக்குட்டி நின்ற இடத்தில் கண்ணன் நின்று அவளைப் பார்த்துச் சிரித்தான். 

     ஏன் கிருஷ்ணா, உன்னையே கன்றுக்குட்டியாக்கிக் கொள்ளத் தெரிந்த உனக்கு, கட்டை அவிழ்த்துக் கொண்டு போகத் தெரியாதா? எனக் கேட்டாள். கட்டியவள் நீ. அவிழ்க்க வேண்டியவள் நீ தான். ஆகவேதான் கட்டுண்டு நிற்கிறேன். கடவுளே, இங்கே கட்டப்பட்டது என் மகனாக இருக்கக் கூடாதே என்று பிரார்த்தித்துக் கொண்டு வந்தாள் யசோதா. அவளுக்காகத்தான் கன்றுக்குட்டியாகி நின்றேன் என்றான் கண்ணன். 

       பாசத்தில் கயிற்றில் கட்டினாள் தாய். பிரேமையால் கட்டினார்கள் கோபியர்கள். பக்தியால் கட்டினான் சகாதேவன். கட்டிய இடத்திலெல்லாம் கட்டுப்பட்டான் கண்ணன். அவன் நீதிக்குக் கட்டுண்டான், நேர்மைக்குக் கட்டுண்டான், அன்புக்குக் கட்டுண்டான், பண்புக்குக் கட்டுண்டான்! ஆகவேதான் பாரதி அவனை சேவகனாக்

“நண்பனாய் மந்திரியாய்

நல்லாசிரியனாய்

பண்பிலே தெய்வமாய்

பார்வையிலே சேவகனாய்”

என்று பாடிப் போற்றினார்.

Pages