90-ஸ்கிட்ஸ், 2K கிட்ஸ் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்க, சர்வதேச அளவில் ஒவ்வொரு தலைமுறைக்கான அடையாளத்தை ஆல்பா, பீட்டா என்று அடையாளப்படுத்துகின்றனர். அதிலும் 2025 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், இனி பிறக்கும் குழந்தைகளுக்கு என பிரத்யேக பெயரை வைத்துள்ளனர். சரி, முன்பிருந்து இப்போது வரைக்கும் இருக்கும் தலைமுறை பெயர்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்...
கிரேட்டஸ்ட் (1901-1927)
இந்த காலத்தில் பிறந்து வளர்ந்தவர் களை கிரேட்டஸ்ட் என்கிறார்கள். இவர்கள் தேசப்பக்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தனர்.
சைலண்ட் (1928-1945)
இந்த காலகட்டத்தில் தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. அப்போது பொருளாதார மந்தநிலை காணப்பட்டது. இந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் பழமைவாத முறைக்கு பழக்கப்பட்ட நபர்கள். மிகவும் அமைதியானவர்கள். அதனால்தான் இவர்களை சைலண்ட் என்று வகைப் படுத்துகிறார்கள்.
பேபி பூமர்ஸ் (1946-1954)
இந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களை பேபி பூமர்ஸ் என்கிறார்கள். இவர்கள் செல்வச் செழிப்பு மிகுந்தவர்களாக இருந்தனர். உயர்ந்த பொறுப்பு, அதிக ஆயுள், அட்வைஸ் செய்வதில் கில்லி... என இருப்பதால்தான் பூமர் அங்கிள்' பிரபல மானது.
ஜென் எக்ஸ் (1955-1980)
60-s, 70-s, 80-s என அழைக்கப்பட்டாலும், இந்த காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களை ஜென் எக்ஸ் என்று வகைப்படுத்துகிறார்கள். இவர்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள். அரசு வேலை வாய்ப்பை பயன்படுத்தியவர்கள்.
மில்லினியல் (1981-1996)
80-ஸ், 90-ஸ்கிட்ஸ், உண்மையில் மில்லினியல் என்றுதான் அழைக்கப்பட வேண்டும். இவர்கள்தான் டிஜிட்டல் உலகை முதன் முதலில் கண்டவர்கள், பாலின பாகுபாட்டை உடைத்தெறிந்து அடுத்தகட்ட நகர்வை நோக்கி அடியெடுத்து வைத்தவர்கள்.
ஜென் ஸி (1997-2009)
சமூகத்தில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கக் கூடியவர்கள். நிதி ரீதியாகவும் சவால்களை சமாளித்து செயல்படுபவர்கள். இவர்கள்தான் 2K கிட்ஸ்களின் தொடக்கம்.
ஜென் ஆல்பா (2010-2024)
கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்தவர்களை, ஜென் ஆல்பா என்றுதான் வகைப்படுத்தினர். ஆமாம்..! இவர்கள் டிஜிட்டல் உலகை அதிக அளவில் பயன்படுத்துபவர்கள். இதுவரை சொன்ன தலைமுறைகளில் அதிக மக்கள்தொகை ஜென் ஆல்பா தலைமுறைதான். சுமார் 200 கோடி பேர் இருப்பார்கள்.
ஜென் பீட்டா (2025-2039)
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பிறக்கும் குழந்தைகளை ஜென் பீட்டா தலைமுறை என்று அழைக்கப் போகிறோம். இவர்கள் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் மேம்பட்டநிலையில் இருப்பார்கள், டிஜிட்டல் உலகின் உச்சக்கட்ட வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் பாக்கியசாலிகள்.