மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் பழக்க வழக்கங்கள்


      குழந்தைகளுக்கு ஓரளவுக்கு நினைவு தெறித்த பின் தங்களது பெற்றோர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து, பெற்றோரை போலவே செய்ய முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் குழந்தைகள் கண்டிப்பாக நூறு சதவிகிதம் பெற்று, பெற்றோரை போலவே மாறுகின்றனர். பெற்றோர்கள் நல்லவர்களானால், குழந்தையும் நல்லவர்களாக வளர்வர்; பெற்றோரே கேடு கெட்டவர்களானால், குழந்தையும் அப்படியே வளரும். நீங்கள் பெற்று எடுத்த குழந்தை நல்லவராவதும் கெட்டவராவதும் உங்கள் கையில்! 

     உணவு நீங்கள் எப்படி உண்ணுகிறீர்களோ அதே போல் தான் குழந்தையும் உண்ணும். நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளை குழந்தையும் சுவை பார்க்க ஆசைப்படும்; நீங்கள் வெறுத்து ஒதுக்கும் உணவுகளை உங்கள் முகபாவனையை பார்த்தே குழந்தையும் ஒதுக்கிவிடும். நீங்கள் உணவினை சிந்தி சாப்பிட்டால், குழந்தையும் அதையே செய்யும்; அது தவறு என்று குழந்தை உணரவே வெகுகாலம் ஆகலாம். 

     குடும்பமாக அனைவரும் அமர்ந்த பின், அனைவரும் சேர்ந்து சாப்பிடுதல், உணவுகளை வீணாக்காத பண்பு, உணவிற்கு தரும் மரியாதை போன்ற முக்கிய விஷயங்களை குழந்தைகள் முதன் முதலாக பெற்றோரிடம் இருந்து கற்கின்றனர்; கற்றதையே அப்படியே சரியா தவறா என்று அறியாமலேயே தன் வாழ்க்கை முழுவதும் பின்பற்றுகின்றனர். 

      நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்தால் உங்கள் குழந்தையும் உங்களோடு சேர்ந்து செய்ய ஆரம்பித்துவிடும்; அதுவே நீங்கள் மதியம் வரை உறங்குபவராக, சோம்பேறியாக இருந்தால் உங்கள் குழந்தையும் கண்டிப்பாக வாழ்வில் பெரும் சோம்பேறியாக திகழ்வான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உங்கள் வீட்டு வேலைகளை நீங்கள் செய்வது, வீட்டில் உள்ளோரின் வேலைகளில் பங்கு கொண்டு, வேலைகளை பகிர்ந்து செய்வது போன்ற விஷயங்களை குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து உள்வாங்கிக் கொள்கின்றனர்.


      நீங்கள் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, ஜாக்கிங் போன்ற செயல்கள், உங்கள் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே அவற்றை செய்ய வைக்கும்; குழந்தைகளுக்கு விளையாட்டின் மீது இயற்கையான ஆர்வம் உருவாகும். நீங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் குழந்தையும் அதை பின்பற்றும்; நீங்கள் நன்கு தின்று கொண்டு தீனிப்பண்டாரமாக உண்டு கொளுத்து இருந்தால், குழந்தையும் அதையே தன் வாழ்வில் பின்பற்றும். 

      உங்கள் நட்பு வட்டம் எப்படிப்பட்டது, எப்படி அவர்களுடன் பழகுகிறீர்கள், அவர்கள் முன்னிலையில் எப்படி பேசுகிறீர், அவர்கள் பின்னால் எப்படி பேசுகிறீர் போன்ற அத்தனை விஷயங்களையும் குழந்தைகள் வெகு ஜாக்கிரதையாக கவனிப்பர்; அதையே தன் பழக்க வழக்கமாக மேற்கொள்வர். நீங்கள் புறம் பேசினால் குழந்தையும் புறம் பேசும்; நீங்கள் நல்ல நண்பனாக இருந்தால், குழந்தையிடமும் அந்த பண்பு காணப்படும். 

       நீங்கள் எந்த நேரத்தில் உறங்குகிறீர், எப்பொழுது விழிக்கிறீர், எந்த நேரத்தில் என்ன செயல்களை செய்கிறீர், உங்கள் உழைப்பினை எப்படி மதிக்கிறீர், வேலைக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு, நேரத்திற்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு போன்ற விஷயங்களை உங்கள் ஒவ்வொரு செயலின் மூலம் குழந்தைகள் கவனித்து கற்றுக்கொண்டு அதையே தாங்கள் வளர்ந்த பின் தங்களது பழக்க வழக்கமாக மேற்கொள்கின்றனர். 

      நீங்கள் எந்த அளவு உங்கள் வீட்டை, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்கிறீர், உங்கள் உடலின் சுத்தம் போன்ற விஷயங்களை குழந்தைகள் கவனித்து கண்டிப்பாக அதே போன்று செய்ய முயற்சிப்பர். மேலும் நீங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்யும் உதவி, மற்றவர்களுக்கு செய்யும் உதவி போன்ற விஷயங்களை பார்த்து உணர்ந்து அதையே தன் வாழ்க்கையிலும் மேற்கொள்வர். 

     பணம் என்று நீங்கள் அலைந்தால், உங்களுக்கு பிறந்த பிள்ளை உங்களை விட பலமடங்கு பணத்தின் பின் அலையும்; இப்படி அலைய வேண்டும் என்பதை அது பெற்றோரான உங்களை பார்த்து தான் கற்றுக் கொள்கிறது. பணத்தை மிச்சப்படுத்த உங்கள் பெற்றோரை நீங்கள் முதியோர் இல்லத்திற்கு அனுப்பினால், நாளை உங்கள் பிள்ளையும் அதே பணம் எனும் காரணத்திற்காக உங்களையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்ப பெருமளவு வாய்ப்பு இருக்கிறது.

Pages